Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் - முதலீட்டுப் பத்திரங்களை மாற்ற 31-ம் தேதி கடைசி : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதலீட்டுப் பத்திரங்களைப் பெற்றவர்கள், அதற்கான தொகையை, இம்மாதம் 31-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஈரோடு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழக முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகத்தின் மூலம், 1992-1993 முதல் 2000 - 2001 வரையிலான நிதியாண்டுகளில், இருகுழந்தை உள்ளவர்களுக்கு தலா ரூ.1500 வீதமும், ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு ரூ.3000 வீதமும் முதலீட்டுபத்திரங்கள் வழங்கப்பட்டது.

மேலும், 2000-2001 முதல் நாளது வரை, இரு குழந்தை உள்ளவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரத்து 200 மற்றும் ரூ.25 ஆயிரம் வீதமும், ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 200 மற்றும் ரூ.50 ஆயிரம் வீதமும் முதலீட்டுபத்திரங்களாக வழங்கப்பட்டது.

தற்போது அத்தொகையினை முழுமையாக பெற்றுக்கொண்டவர்கள் தவிர, விடுபட்ட பயனாளிகள் சிலர் உள்ளனர். அவர்கள் அத்தொகையினை வரும் 31-ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பலன் பெறும் பயனாளி 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தங்களிடம் உள்ள முதலீட்டு பத்திரத்தின் அசல் அல்லது நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச்சான்று, பயனாளி மற்றும் அவரது தாயாரின் புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்துடன், ஈரோடு ஆட்சியர் அலுவலக 6-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுக வேண்டும். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x