Published : 13 Aug 2021 03:18 AM
Last Updated : 13 Aug 2021 03:18 AM
உழவர் பேரவையின் தொடர் போராட்டம் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 16-ம் தேதி முதல் செயல்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் செயல்பட்டு வந்த 71 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் கடந்த ஜுலை மாதத்துடன் மூடப்பட்டன. இதனால், சொர்ணவாரி பருவத்தில் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் 75 கிலோ மூட்டை நெல், ரூ.850-க்கு விலை போவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதேநேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப் பட்டால் ரூ.1,450-க்கு மேல் விலை கிடைக்கும் என்றும், ஒரு மூட்டைக்கு ரூ.600 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் கடந்த 8 மற்றும் 9 -ம் தேதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்றது. அவர்களது கோரிக்கை மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததால், உழவர் பேரவையின் தொடர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் 25 இடங்களில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் வரும் 16-ம் தேதி முதல் செயல்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் 24,500 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,47,000 மெட்ரிக் டன் நெல் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16-ம் தேதி முதல் செயல்படும்
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் அணுக்குமலை, கொளத்தூர், குன்னத்தூர், மண்டகொளத்தூர், வண்ணாங்குளம், தச்சூர், மாமண்டூர், எலத்தூர், வல்லம், மருதாடு, கொவளை, நல்லூர், நெடுங்குணம், நம்பேடு, மேல் சீசமங்கலம், பாராசூர், தவசிமேடு, நாவல்பாக்கம், புளியரம்பாக்கம், ஆக்கூர், நாட்டேரி, அரியூர், தூசி, வெம்பாக்கம் மற்றும் பெருங் கட்டூர் ஆகிய 25 இடங்களில் முதற்கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 16-ம் தேதி முதல் செயல்படும்.நெல் கொள்முதல் நிலையங் களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய, வரும் 13-ம் தேதி (இன்று) முதல் முன்பதிவு செய்ய வேண்டும். சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள், நெல் சாகுபடி செய்த பரப்பளவுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, சிட்டா அடங்கல் ஆகிய ஆவணங்களை tvmdpc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
பதிவு நடைமுறைகள்
விவசாயிகள், தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் எண் (ஓடிபி) அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரின் 94872-62555 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT