Published : 13 Aug 2021 03:18 AM
Last Updated : 13 Aug 2021 03:18 AM
தி.மலை மாவட்டத்தில் 1,243 பண்ணைக்குட்டைகள் அமைக் கும் பணியை திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் சீலப்பந்தல் ஊராட்சியில் ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தலா ரூ.1.78 லட்சம் என மொத்தம் ரூ.21 கோடியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 579 ஊராட்சிகளில் 1,243 பண்ணைக் குட்டை அமைக்கப்படவுள்ளன. இதற்கான தொடக்க விழா, திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த சீலப்பந்தல் ஊராட்சியில் விவசாயி வெங் கடேசனின் நிலத்தில் நேற்று காலை நடைபெற்றது.
ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து, பண்ணைக் குட்டை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,243 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8-ம் தேதிக்குள் 1,243 பண்ணைக் குட்டைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பண்ணைக் குட்டை களும் 72 அடி நீளமும், 36 அடி அகலமும், 5 அடி ஆழமும் எனும் அளவில் 3,63,000 லிட்டர் மழைநீரை தேக்கி வைக்கும் அளவு உருவாக்கப்படவுள்ளன.
பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். பண்ணைக் குட்டையில் நீரை சேமிப்பதன் மூலம், பாசனத் தேவைக்கு பயன்பெறும். இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 40.58 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். கோடை காலங்களில் உதவியாக இருக் கும். குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறவும் உதவியாக இருக்கும். பண்ணைக் குட்டை முழுவதும் முழு மானியத் தொகையில் அமைத்துக் கொடுக்கப்படுகிறது” என்றார்.
இதில், கூடுதல் ஆட்சியர் பிரதாப், உதவி ஆட்சியர் ரவி, ஊரக வளர்ச்சித் துறை செயற் பொறியாளர் தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் பூங்கொடி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் யசோதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT