Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட கொல்லன்கோயில், சிவகிரி பேரூராட்சிகள் மற்றும் அஞ்சூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டப்பணிகள் குறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
எழுமாத்தூர் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் 1300 மாணவர்கள் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில், சிவகிரி சந்தை பேட்டை அம்மன்கோயில் பகுதியில் மகளிருக்கென தனி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, கல்லூரி அமைக்க 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலத்தை இன்று பார்வையிட்டுள்ளேன். இங்கு கல்லூரி அமைப்பதற்கான முன்மொழிவினை உடனடியாக சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகிரி பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு எதிரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அரை ஏக்கர் பரப்பளவில் தினசரி சந்தை, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, ரூ.13.50 கோடி மதிப்பில் தரைமட்டத் தொட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லன் கோயில் பகுதியில், தரைமட்ட பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைக்கும் பணி, பொரசபாளையம் நொய்யல் ஆற்று பாலத்தில் தரைமட்ட பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைப்பது, நூலகம் அமைப்பது போன்றவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பெ.பிரேமலதா, கொடுமுடி வட்டாட்சியர் எஸ்.தர் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT