Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM
பலன் தரும் மரங்களை கணக்கெடுத்து அதில் மஞ்சள் வர்ணம் பூசி, கருப்பு நிறத்தில் எண்களை எழுதி புதுச்சேரியில் பொதுப்பணித்துறை பராமரிப்பதில்லை. வனமே இல்லாத புதுச்சேரியில் இயங்கிவரும் வனத்துறையும் இம்மரங்களைக் கண்டுக்கொள்வதில்லை.
புதுச்சேரியில் பொதுப்பணித் துறையில் கட்டிடம் மற்றும் சாலைகள் தெற்குப் பிரிவுக்கு சொந்தமான இடங்களில் 3,794 மரங்களும், கட்டிடம் மற்றும் சாலைகள் வடக்குப் பிரிவில் 2,911 மரங்களும், தேசிய நெடுஞ்சாலை பிரிவில் 1,612 மரங்களும், நீர்ப்பாசன கோட்ட இடங்களில் 14,169 மரங்களும் என பொதுப்பணித்துறைக்கு என்று 22,466 மரங்கள் உள்ளன.
இவற்றில் பலன் தரும் மரங்களான புளிய மரம், தென்னை, பனை மரங்களும் அடங்கும். பலன் தரும் மரங்கள் விவரம் தொடர்பான விவரங்களைக் கேட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி விண்ணப்பித்தார். அப்போது பலன் தரும் மரங்கள் தொடர்பாக பொதுப்பணித்துறை கணக்கே எடுக்கவில்லை என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரிடம் அவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதுபற்றி ரகுபதி கூறியதாவது:
புதுச்சேரியில் பலன் தரும் மரங்களை இதுநாள் வரையில் கணக்கெடுக்காமல் பொதுப் பணித்துறையினர் உள்ளனர். இதுபோல் வனமே இல்லாத புதுச்சேரியில் செயல்பட்டு வரும் வனத்துறையினரோ சாலை ஓர மரங்களை கூட பராமரிக்காமல் உள்ளனர்.
புதுச்சேரியில் பொது இடங்களில் பலர் மரங்கள் நடுவதாக குறிப்பிடுகின்றனர். அதேநேரத்தில் பொதுப்பணித்துறை, வனத்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் ஆகியோரிடம் எத்தனை மரங்கள் நடப்பட்டன, எந்த வகையான மரங்கள் நடப்பட்டது என்கிற தகவலை தெரிவிப்பதில்லை.
உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் பாதையில் நடப்பட்ட மரக்கன்றுகள் 2 ஆண்டுகள் கழித்து மரங்களாக வளர்ந்த பட்சத்தில் உயர்மின் அழுத்த கம்பிகள் மீது பட்டு மின் இழப்பு ஏற்படுகிறது. இதனால் மின்துறையினர் அந்த மரக்கிளைகளை வெட்ட ஒரு நாள் முழுவதும் அந்த பகுதியில் மின்தடை செய்து மின்துறை ஊழியர்கள் இந்த மரங்களை வெட்டுகின்றனர்.
முதலில் எந்தெந்தப் பகுதிகளில் எந்த வகையான மரங்கள், எத்தனைநடப்படுகின்றன என கணக்கிடவேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகளை முறையே பதிவேடுகள் மூலம் பராமரிக்கச் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பலன் தரும் மரங்களில் மஞ்சள் பெயிண்ட் அடித்து கருப்பு கலரில் எண்கள் எழுதி பராமரிக்க வேண்டும். பலன் தரும் மரங்களை பொதுப்பணித்துறையினரே குத்தகைக்கு விட வேண்டும். சாலை ஓர மரங்களை வனத்துறை மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT