Published : 12 Aug 2021 03:22 AM
Last Updated : 12 Aug 2021 03:22 AM
வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் தொடர்புடைய 8 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாமலை வாசன். இவர், வீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 30 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடு போனது. இது குறித்து அவர் அம் பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதேபோல, வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணம், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மர்ம நபர்களை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர்கள் சாந்த லிங்கம் (திருப்பத்தூர்), பழனிச் செல்வம் (வாணியம்பாடி) காவல் ஆய்வாளர்கள் ஹேமாவதி (திருப் பத்தூர் நகரம்), அருண்குமார் (நாட்றாம்பள்ளி) ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டது.
இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டுச்சாலையில் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்செல்வம் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ் வழியாக அடுத்தடுத்த இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேரை மடக்கி விசாரணை நடத்தியபோது அவர்கள் வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதும், வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், வாணியம்பாடி அடுத்த மோட்டுபாளைத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(28), சிக்கணாங் குப்பம் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (20) காமேஷ்(20), வினோத் குமார்(20), அரபாண்ட குப்பத்தைச் சேர்ந்த முரளி(24), லோகு (20), சக்திவேல்(24), பசுபதி(23) ஆகிய 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் தங்க நகைகள், 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT