Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
நாமக்கல் பெரியப்பட்டி நரிக்குறவர் காலனி குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வள மையங்களுக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் 6 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் கரோனா பெரும் தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் களப்பணி வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உணவகங்கள், பழக்கடைகள், காய்கறி கடைகள், கட்டுமான பணி நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை, குவாரி, தொழிற்சாலைகள், விவசாய பணி நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. கணக்கெடுப்பு பணியில் கண்டறியப்படும் குழந்தைகள் உடனடியாக பள்ளியில் சேர்க்கப்பட்டு அவர்களது தொடர் கற்றலுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதரவற்ற பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டால், கொல்லிமலை கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, அவர்களது தொடர்ச்சியான கற்றலை உறுதி செய்வதோடு அவர்களது மேல் படிப்புகளுக்கான விடுதி வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் விவரங்களை அருகாமையில் உள்ள பள்ளி அல்லது வட்டார கல்வி அலுவலகங்களுக்கு தகவல் அளித்து அக்குழந்தைகளின் தொடர் கற்றலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT