Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
கூட்டுறவு சங்க நிலத்தை குத்தகைக்கு வழங்கியதில் முறைகேடு செய்ததாக, கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்கத்துக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை, தனிநபர் ஒருவருக்கு மாதம் ரூ.25 ஆயிரத்துக்கு குத்தகைக்கு வழங்கி முறைகேடு செய்ததாகக் கூறி, அச்சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணைத் தலைவர் ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசியல் ரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான செல்வேந்திரன், ‘‘நிலத்தை குத்தகைக்கு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன. அதன்படி உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அதன் அடிப்படையில்தான் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, “ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளை எடுத்த எடுப்பில் இடைநீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு இடைநீக்கம் செய்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக்கூறி இருவரையும் இடைநீக்கம் செய்து சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் முறைகேடு புகார் தொடர்பான மனுதாரர்களுக்கு எதிரான விசாரணையை அதிகாரிகள் 8 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கலாம், என அறிவுறுத்தியுள்ளார்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளை எடுத்த எடுப்பில் இடைநீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT