Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசுவிடம் அருங்காட் சியகம் அமைப்பு கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் நேற்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம் பழமையும் தொன்மையும் வாய்ந்த மாவட்டம். இங்கு ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, திருவக்கரைப் பகுதியிலுள்ள 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் மரங்கள், மரக்காணம் பகுதியில் காணப்படும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள், வானூர் வட்டம் பொம்மையார் பாளையம் பகுதியில் கண்டறியப்பட்ட 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குழந்தையின் மண்டை ஓடு, கீழ்வாலை, ஆலம்பாடி உள்ளிட்ட இடங்களில் காணப்படும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் ஆகியவை விழுப்புரம் மாவட்டத்தின் பழமைக்கும் தொன்மைக்கும் ஆகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.
மேலும், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், கல்வெட்டுகள், நடுகற்கள், சிற்பங்கள், ஓவியங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளன; கிடைத்தும் வருகின்றன.
இந்த அரிய வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாக்கவும் வருங்கால சந்ததியினருக்குக் காட்சிப்படுத்தவும் விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் தொடங்க வேண்டும்.
மாவட்டத் தலைநகரான விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆட்சி காலத்தில் எமது கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து இயக்கம் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் வரை எடுத்த முயற்சிகள் ஏராளம். அருங்காட்சியகம் எனும் ஒற்றைக் கோரிக்கைக்காக இத்தனை முயற்சிகள் வேறு எந்த மாவட்டத்திலும் எடுக்கப்பட்டு இருக்குமா எனத் தெரியவில்லை? மாவட்டத் தலைநகரான விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்பது விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை - கனவு.
எனவே, விழுப்புரத்தின் வரலாற்றுத் தேவையைக் கருத்தில் கொண்டு இங்கு அரசு அருங்காட்சியகம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT