Published : 11 Aug 2021 03:18 AM
Last Updated : 11 Aug 2021 03:18 AM
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் வரும் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.
விழா நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு மற்றும் அவசர ஊர்தி வாகனத்தினை தயார் நிலையில் வைக்க வேண்டும். விழாவில் பங்குபெறுபவர்கள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் உடல் வெப்பத்தை கண்காணிக்க தெர்மல் ஸ்கேனர் அமைத்து கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். விழா நடைபெறும் இடத்தில் தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT