Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
'இந்தியாவை பாதுகாப்போம்' என்ற கோரிக்கையுடன் புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மூன்று மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் நேற்று மிஷன்வீதி வஉசி பள்ளி அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்த்தில் ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேதுசெல்வம், ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் ஞானசேகரன், ஏஐசிசிடியூ பொதுச் செயலாளர் புருஷோத்தமன், எல்எல்எப் செயலாளர் செந்தில், எம்எல்எப் செயலாளர் வேதா வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கிய ஆகஸ்ட் 9-ம் தேதி `இந்தியாவை பாதுகாப்போம்' என்ற முழக்கத்தோடு போராட மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்ததின் பேரில் புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தை நடத்தினர்.
தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்பு, வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு, பொதுத்துறையில் புதிய பணியிடம் உருவாக்கக் கூடாது என்ற தடையை நீக்க வேண்டும். வருமான வரி கட்ட வருவாய் இல்லாத குடும்பத்துக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். ஒரு நபருக்கு 10 கிலோ வீதம் 6 மாதம் விலையில்லாத உணவு தானியம் வழங்க வேண்டும். பொதுத்துறை, அரசு துறைகளை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
இதேபோல் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜீவ்காந்தி சிலை சதுக்கம், சேதராப்பட்டு ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT