Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

சேலம் மாநகராட்சி பகுதிகளில் - மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி : ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்க தடை

சேலம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சி பகுதியில்உள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், பூ கடைகள் உள்ளிட்டவை தினமும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்க அனுமதி இல்லை.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டியதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதிக அளவில் மக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும், மக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.

சேலம் மாநகரம்

சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி, நகைக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். மேலும், இவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட அனுமதியில்லை.

செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வஉசி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. துணிக் கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

சந்தைகளுக்கு தடை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகளுக்குமுழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகள் கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்திய சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

கொங்கணாபுரம் மற்றும் வீரகனூர் வாரச்சந்தைகள் 23-ம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மேட்டூர் அணை பூங்காவில், 23-ம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.

பொது கட்டுப்பாடுகள்

இறைச்சி, மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யவேண்டும். மேலும், கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் வைக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x