Published : 08 Aug 2021 03:19 AM
Last Updated : 08 Aug 2021 03:19 AM
கடையநல்லூர் அருகே வடகரையில் காட்டு யானைகள் புகுந்தன. வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீண்ட நேரம் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
கடையநல்லூர் அருகே வடகரையைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து, மா, தென்னை, வாழை, நெல், தண்ணீர் குழாய்கள், வேலிகள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த மாதம் வடகரை ரகுமானியபுரத்தில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. நேற்று அதிகாலை 4 மணியளவில் வடகரை மெயின்ரோடு அருகே 2 யானைகள் நிற்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். யானையை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அவற்றை விரட்ட முயன்றவர்களை யானைகள் துரத்தின. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊருக்குள் யானைகள் புகுந்தது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உதவி வனப் பாதுகாவலர் ஷாநவாஸ்கான், கடையம் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் காலை 8 மணியளவில் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறும்போது, “கடந்த ஓராண்டுக்கும் மேலாக அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. தற்போது ஊருக்குள்ளும் வரத் தொடங்கிவிட்டதால் மக்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. யானைகள் அடிக்கடி மலைப்பகுதியை விட்டு வெளியே வருவதற்கான காரணத்தை வனத்துறையினர் ஆராய்ந்து, அவை நிரந்தரமாக வனப்பகுதியில் இருக்கவும், காட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
வளத்துறையினர் கூறும்போது, “யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே வந்த வழியை தேடி மீண்டும் வருவது வழக்கம். யானைகள் மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் அதன் வழியில் செல்லும். ஆனால், யானையின் வழியில் குறுக்கிட்டு இடையூறு செய்தால் யானைகளுக்கு கோபம் வரும். அவ்வாறு யானைகளுக்கு இடையூறு செய்யும்போதுதான் யானை- மனித மோதல் ஏற்படுகிறது.
வனத்துறையினர் 26 பேர் பல்வேறு குழுக்களாகச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வந்த யானைகள் எதையும் சேதப்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. யானைகள் மீண்டும் வராமல் தடுக்க தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT