Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM
தூத்துக்குடி/ திருநெல்வேலி/தென்காசி/ நாகர்கோவில்
கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமண் கிராமத்தில் மக்களை நோக்கி மருத்துவம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி திட்டத்தை தொடங்கி வைத்து, பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார். சுகாதாரத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
முடநீக்கு, நீரிழிவு ஆகிய சிகிச்சைகள் மேற்கொண்ட நோயாளிகளுக்கு வீடுவீடாகச் சென்று மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
விழாவில், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், இணை இயக்குநர் நலப்பணிகள் முருகவேல், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்கு நர் அனிதா, ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழு தலைவர் ரமேஸ் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி
தென்காசி
மேலநீலிதநல்லூர் அருகே கடையாலுருட்டியில், `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மருத்துவ வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தரராஜ் தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் ஈ.ராஜா, எஸ்.எஸ்.பழனிநாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இத்திட்டம் குறித்து ஆட்சியர் கூறும்போது, ``தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் 10 வட்டாரங்களில் செயல்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ள 41,172 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலநீலிதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் 1,808 நோயாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறுவர்” என்று தெரிவித்தார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா, மாவட்ட தொற்றாநோய் பிரிவு திட்ட அலுவலர் கோகுல், மேலநீலிதநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் மதனசுதாகர், மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாபன் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தோவாளை வட்டம் சந்தைவிளை அரசு துணை சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட 99,432 பேரில், 1,438 பேர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்ததால் பாதிக்கப்பட்ட வர்கள் மற்றும் 1,254 பேர் நோய் பாதித்து படுக்கையில் உடற்பயிற்சி சிகிச்சை மேற்கொள்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் என்றார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, தொற்றுநோய் பிரிவு மாவட்ட திட்ட அலுவலர் கிருஷ்ணபிரசாத் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT