Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

சாராய வியாபாரியை கைது செய்ய வலியுறுத்தி - திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை : பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் மனு

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருப்பத்தூர்

சாராய வியாபாரியை கைது செய்ய வலியுறுத்தி திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த மேற் கத்தியானூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட் டோர் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு புகார் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ‘‘நாட்றாம்பள்ளி வட்டம் மட்றப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கத்தியானூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலிவேலை செய்து வருகிறோம்.

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த துளசி (43) என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு சொந்தமான நிலத்தில் சாராய கேன்களை பதுக்கி வைத்து இரவு நேரங்களில் சாராய விற்பனை செய்து வருகிறார். இதனால், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் எங்கள் கிராமத்துக்குள் நுழைந்து அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் துளசி மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், திருப்பத்தூர் மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கடந்த மாதம் மேற்கத்தியானூர் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது துளசி நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட சாராய பேரல்களை பறிமுதல் செய்தனர். இதையறிந்த துளசி கிராமமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தான் அவரது நிலத்தில் இருந்து சாராய பேரல்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததாக கருதி எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருப்பதி(52), அவரது மனைவி சங்கீதா (48), திருப்பதியின் தந்தை மணி (70) ஆகியோரை துளசி மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள் (38), அவர்களது மகன்கள் தினேஷ்(22), சந்தோஷ்(20),உறவினர் ஆறுமுகம் (37) ஆகியோர் ஒன்று சேர்ந்து ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் திருப்பதி குடும்பத்தினர் படுகாயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

துளசி குடும்பத்தினர் எங்களுக் கும் அச்சுறுதல் அளித்து வரு கின்றனர். எனவே, அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். துளசி குடும்பத்தாரிடம் இருந்து எங்கள் கிராம மக்களுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை பெற்ற காவல் துறையினர் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க அறிவுறுத்தினர். அதன்பேரில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்த லிங்கத்திடம் மேற்கத்தியானூர் கிராம மக்கள் சாராய வியாபாரி துளசி மீது புகார் மனு அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x