Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு சொந்தமான - ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் : பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

தென்காசி

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திர ராவ், செந்தில் ஆறுமுகம், ராமன், சுந்தரம் ஆகியோர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், மதுரை கோட்ட மேலாளர் லெனின், தென்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

செங்கோட்டை, தென்காசி ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் லிப்ட் வசதி செய்ய வேண்டும்.

செங்கோட்டையில் ரயில் நிலையம் அமைக்க ஏதுவாக திருவிதாங்கூர் அரசர் ஏராளமான நிலங்களை வழங்கினார். இந்தநிலப்பரப்பு பல தனியார்களால்கடந்த 120 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ரயில் நிலைய பரப்பளவு குறைந்து போனது. ரயில்வே நிர்வாகம் பழைய ஆவணங்களை ஆராய்ந்து இழந்த நிலங்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

செங்கோட்டை ரயில் நிலையத்தில் உடனடியாக பிட்லைன் அமைக்க வேண்டும். இதன் மூலம் தற்போது மதுரையுடன் நிற்கும் டெல்லி சம்பர்க் கிராந்தி ரயில், டேராடூன் ரயில், கச்சகுடா ரயில் போன்ற மேலும் பல ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யலாம்.

பயணிகள் ஓய்வறை

எனவே , செங்கோட்டை, தென்காசி ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் முழு நீளத்துக்கும் மேற்கூரை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி, முன் பதிவுவசதி உள்ள ரயில் பெட்டிகளை அடையாளம் காட்டும் எலெக்ட்ரானிக் தகவல் பலகைகள் அமைக்கவேண்டும். ரயில் நிலைய நடைமேடைகளில் சில பகுதிகளில்கிரானைட் தளம் போடப்பட்டுள்ளதால் மழை பெய்யும் நேரங்களில் மக்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. எனவே, இதனை மாற்ற வேண்டும்.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ஓய்வறை கட்ட வேண்டும். வடபுறத்திலுள்ள நுழைவு பகுதியில் டிக்கெட் கவுன்டர் அமைக்க வேண்டும். முன்பதிவு மையம் காலை முதல் இரவு வரை இயங்க வேண்டும்.

செங்கோட்டை, தென்காசி ரயில் நிலையங்களை நவீன மயமாக்க வேண்டும். செங்கோட்டை - புனலூர் வழித்தடத்தை மின்மயமாக்க வேண்டும். கரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செங்கோட்டை- திருநெல்வேலி, செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் ரயில்களை விரைவில் இயக்க வேண்டும். தற்போது புனலூரோடு நிறுத்தப்படும் பாசஞ்சர் ரயில்களை தென்காசி வரை நீட்டிக்க வேண்டும். பாலக்காடு - திருநெல்வேலி இடையே இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு செங்கோட்டை, பாவூர்சத்திரம் நிறுத்தங்களை அறிவிக்க வேண்டும். இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே வாரம் ஒரு முறை இயங்கி வந்த எக்ஸ்பிரஸை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். செங்கோட்டை - தாம்பரம் அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை திருநெல்வேலி- தாம்பரம் இடையே தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக சென்று வந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். குருவாயூர்- புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வழியாக குருவாயூர்- மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க வேண்டும். கோவை- மதுரை பாசஞ்சர் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். வாரம் மும்முறை இயங்கும் சென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரி ரயிலாக விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x