Published : 31 Jul 2021 03:15 AM
Last Updated : 31 Jul 2021 03:15 AM
சேலத்தில் கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பதவி ஏற்கவில்லை. இதனால், கோயில்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்ப கடந்த 26-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் எழுத்தர், தட்டச்சர், இரவு காவலர், ஓதுவார், அர்ச்சகர் உள்ளிட்ட 540 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஒவ்வொரு கோயில் நிர்வாக வசதிக்கு ஏற்ப வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை போட்டிப் போட்டு விண்ணப்பங்களை வாங்கி, வேலைக்கு சேரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட 16 கோயில்களில் எழுத்தர், அர்ச்சகர், இரவு காவலர், ஓதுவார் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில், கோட்டை மாரியம்மன் கோயில் மற்றும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்களில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது.
ஆனால், தற்போதைய அறிவிப்பில் இந்த கோயில்கள் இடம் பெறவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக, கடந்த ஆட்சியில் இக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அறங்காவலர்கள் பதவி ஏற்றுக் கொள்ளாமலும், செயல்பாடு இன்றியும் உள்ளனர். அறங்காவலர்களின் ஒப்புதலுடனே கோயில்களில் காலிப் பணியிடம் நிரப்ப முடியும் என்ற விதி உள்ளதால், தற்போது, காலிப்பணியிடத்துக்கான அறிவிப்பை வெளியிட முடியாத நிலைக்கு கோயில் நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளதாக கோயில் அலுவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோயில் அலுவலர்கள் கூறியதாவது;
கடந்த ஆட்சியில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஆட்சி மாற்றம் அடைந்த பின்னர் பதவி ஏற்றுக் கொள்ளாமலும், செயல்பாடின்றியும் உள்ளனர். கோயில்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட அறங்காவல் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதி முறை உள்ளது. இதனால், தற்போது, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பும் பட்டியலில் கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட நான்கு கோயில்களில் உள்ள காலியிடம் நிரப்புவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT