Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் : கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த கூட்டத்தில் ஆட்சியர் ஸ்ரேயா சிங் பேசினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

அனைத்து தொழில் நிறுவனங்களிலும் கொத்தடிமைத் தொழில் முறை உள்ளதா என்பதை கண்காணிக்க தொடர் கூட்டாய்வுகளை அரசுத் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும். அனைத்து தொழில் நிறுவனங்களிலும், தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க 18004252650 என்ற மாநில கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண் விவரத்தினை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வினை தொடர்ந்து கண்காணித்து அரசுத்துறை நிவாரணங்கள் அவர்களுக்கு சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தினை கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா.சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மு. மரகதவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x