Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் மனு :

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். (அடுத்த படம்) சித்த மருத்துவக் கல்லூரிக்கு 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யக்கோரிய நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தென்காசி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இச்சங்கத்தின் நிர்வாகிகள் பெரும்படையார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:

‘காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்றஇடத்தில் அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை அகற்றவேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். உரத்தட்டுப்பாட்டை நீக்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர் ஆர். பாரதிமுருகன் தலைமையில் அளித்த மனு:

பாளையங்கோட்டை செட்டிகுளத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, இந்திய மருத்துவ சித்ததமிழ் பல்கலைக்கழகம் விரைவிலேயே அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாளையங்கோட்டையில் தற்போது இயங்கிவரும் சித்த மருத்துவமனைக்கு வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற வசதியாக இருப்பதால் அதை அங்கேயே தொடர்ந்துசெயல்பட அனுமதிக்க வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரி வளர்ச்சிக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் போதிய அளவு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். கல்லூரி வளர்ச்சிக்கான 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டம்

தாழையூத்து சங்கர்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள்சீரான குடிநீர் விநியோகம் கேட்டுஅங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரகுளம், பேச்சிநகர், அருந்ததியர் காலனி பகுதிகளில் கடந்த ஒருமாதமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததையடுத்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மின் கம்பங்களை அகற்ற வேண்டும்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஏ.பி.நாடானூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று மனு அளித்தனர். அதில், ‘கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எங்கள் ஊருக்கு அருகில் உள்ள தனியார் கல் குவாரிகளுக்கு உயர் அழுத்த மின் இணைப்பு வழங்க தனியார் பட்டா நிலங்கள் மற்றும் குறுகிய கிராமச் சாலையோரங்களில் மின் கம்பங்களை நட்டனர்.

மின் இணைப்பு கொடுக்க வரும்போது, ஊர் மக்கள் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் வேலையை நிறுத்திவிட்டுச் சென்றனர். இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் அடிக்கடி வந்து, மின் இணைப்பு கொடுக்க முயன்று வருகின்றனர். மேலும், கிராமச் சாலையில் தினமும் 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாகச் செல்வதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கல்குவாரிக்கு உயர் அழுத்த மின்சாரம் வழங்க அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் இடையூறாக உள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

சங்கரன்கோவில் அருகே உன்ன பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ‘பொன்னகரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி சுமார் 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரை தொட்டியில் குடிநீர் ஏற்றவில்லை.

அதற்கு பதிலாக ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள சிறிய தொட்டியை வைத்துள்ளனர். அதற்கும் முறையாக குடிநீர் வரவில்லை. இதனால் ஊர் மக்கள் அனைவரும் அருகில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து வருவதால் அவதிப்படுகின்றனர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x