Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM
விழுப்புரத்தில் நடைபெறும் சீருடை பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்பவர்கள் கரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகள் வரும் 26-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 20 மையங்களில் நடைபெற உள்ளன.
இந்த எழுத்து தேர்வில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங் களை சேர்ந்த 2,256 ஆண்கள், 700 பெண்கள் என மொத்தம் 2,956 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
இத்தேர்வையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமைதாங்கினார். எஸ்பி நாதா முன்னிலை வகித்தார். இதில் ஏடிஎஸ்பி தேவநாதன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், சிறைத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள், அமைச்சு பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் டிஐஜி பாண்டியன் பேசியது:
தேர்வர்களுக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும் ஆஜராக வேண்டும். தேர்வுக்கு வரும் நபர்கள் தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை எடுத்து அதற்கான மருத்துவச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். அவ்வாறு மருத்துவச்சான்று பெற்று வராத தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். கரோனா தொற்று உள்ளவர்கள் தேர்விற்கு பங்கேற்க வரத்தேவையில்லை. அதற்கு மாறாக 3-ம் நபர் மூலம் விண்ணப்பம், அழைப்பு கடிதத்தின் நகல் மற்றும் மருத்துவ சான்றுடன் குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு மைய தலைவரிடம் நேரில் தெரிவித்தால் அந்த நபர்களுக்கு பின்னர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
தற்போது கரோனா தொற்று காலம் என்பதால் சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் காலை 6 மணிமுதல் 9 மணி வரை 300 தேர்வர்களும், 9 மணிக்கு மேல் 200தேர்வர்களும் அனுமதிக்கப்படு வார்கள். முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடற்கூறு அளக்கப் பட்டு அதில் தகுதியுள்ளவர்கள் உடற்தகுதி தேர்வுக்கு அனுமதிக் கப்படுவார்கள்.
இதில் தகுதி பெற்ற நபர்கள், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி முதல் தினமும் 500 பேர் வீதம் உடற்திறன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இத்தேர்வுக்கு கலந்துகொள்ள வரும் தேர்வர்கள் கண்டிப்பாக 2 முகக்கவசம் எடுத்துவர வேண்டும். தேர்வர்கள் வரும்போது ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அசல் சான்றிதழ்களை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். அனைவரும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தேர்வில் கலந்து கொள்ள வரும் தேர்வர்கள் செல்போன் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT