Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
டீசல் மீதான வரி குறைப்பு, காலாவதியான சுங்கச் சவாடியை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய, மாநில அரசுக்கு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் சுமுக முடிவை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளோம் என தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் கோபால்நாயுடு தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக அறிவித்துள்ளார். விலையை குறைத்தால் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும்.
நாடு முழுவதும் 571 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 33 சுங்கச் சாவடிகளுக்கு ஏற்கெனவே வசூல் உரிமம் முடித்து விட்டது.எனவே காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும்.
ஸ்பீடு கவர்னர், ஒளிரும் பட்டை போன்ற தவறை கடந்த ஆட்சியாளர்கள்போல செய்யாமல் இச்சட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 1 முதல் லாரி உரிமையாளர்கள் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி கொடுக்கமாட்டார்கள். நீட் தேர்வு உள்ளிட்ட பலகோரிக்கைகளுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
எங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்து இழப்பில் இருந்து மீட்க வேண்டும்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மத்திய, மாநில அரசுக்கு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் கரோனா காரணமாக 30 சதவீதம் லாரிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. தென்மாநிலம் முழுவதும் 26 லட்சம் லாரிகள் உள்ளன. அவற்றில் தற்போது 6.50 முதல் 7 லட்சம் லாரிகள் மட்டுமே இயங்குகிறது. 40 சதவீதம் லாரிகள் வெளியே எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
வாகனங்களுக்கு பயோ டீசல் பயன்படுத்துவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பயோ டீசலை நேரடியாக பயன்படுத்தினால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் சி.தன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT