Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM
வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு ஆன்லைனில் மோசடி செய்யும் செய்யும் புகார்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக பேஸ்புக், வாட்ஸ்ஆப்-களில் மற்றவர்களின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை சிலர் திருடி வருகின்றனர். இவர்கள் தனி வாட்ஸ்ஆப் குரூப்களை உருவாக்கி, அதன் மூலம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற படங்களை அனுப்பி தங்கள் பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இது குறித்த புகார்கள் சைபர் கிரைம் சிறப்புப் பிரிவுக்கு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாகவே வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களது வங்கிக் கணக்கு காலாவதியான நிலையில், புதுப்பிக்க வேண்டும் என வாடிக்கையாளர்களின் மொபைல் போன் மூலம் தகவல்களைப் பெற்று பண மோசடி செய்யும் புகார்கள் அதிகரித்து வருகின்றன.
மதுரையைச் சேர்ந்த அரசு பொறியாளர், கண்காணிப்பாளர் உட்பட 3 பேரிடம், எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக ஒருவர் கடந்த வாரம் பேசி உள்ளார். அவர், தங்களது வங்கிக் கணக்கு எண், டெபிட் கார்டு நம்பர் உட்பட பல்வேறு விவரங்களைப் பெறும் வகையில் ‘லிங்’ ஒன்று அனுப்பி உள்ளார்.
பொறியாளர் உட்பட மூவரும் தங்களது மொபைல் போனுக்கு வந்த லிங்கைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு விவரங்களுடன் ஓடிபி எண்களைத் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் பொறியாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரமும், கண்காணிப்பாளர் கணக்கில் இருந்து ரூ.17 ஆயிரமும், மற்றொருவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரமும் எடுத்திருப்பதாக மொபைல் போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இது குறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடமும், சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:
எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பங்களைக் கற்றவர்கள் இது போன்ற மோசடியில் ஈடுபடுகின்றனர். இன்றைய அவசர உலகில் வங்கிக்கு சென்று சில நடவடிக்கையை நேரில் மேற்கொள்ள இயலாது. இந்த சூழ்நிலையில்தான் வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்களது வேலை மிகச் சுலபமாக ஆன்லைனில் முடித்துக் கொடுக்கிறோம் எனக் கூறும் ஆசை வார்த்தையை நம்பி ஏமாறுகின்றனர். குறிப்பாக எஸ்பிஐ வங்கி பெயரில் தான் காலாவதியான வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறி பண முறைகேடு நடக்கிறது.
இது போன்ற மோசடி குறித்து ஓரிரு மணி நேரத்தில் புகார் வந்தால் பாதிக்கப்பட்டோர் பணத்தை திரும்பப்பெற ஓரளவு வாய்ப்பு உள்ளது. தாமதமாக வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பலிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.
வங்கி மேலாளர் ஒருவரிடம் கேட்டபோது, பெரும்பாலும், வங்கியின் போலி முத்திரையைப் பயன்படுத்தி வாட்ஸ்ஆப், பேஸ்புக் மூலம் பண முறைகேடு நடைபெற்றது குறித்து புகார்கள் வருகின்றன. சில நேரத்தில் ஏமாந்த பிறகு தாமதமாக வருவதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது. மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT