Published : 12 Jul 2021 03:13 AM
Last Updated : 12 Jul 2021 03:13 AM
கொங்கு நாடு பாஜகவின் எண்ணம் இல்லை என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சோளிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசே காரணம் என்ற பொய்யான குற்றச்சாட்டை தமிழக அரசு சுமத்தி வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், திருப்பூரில் ஒவ்வொரு பெட்ரோல் நிரப்பும் மையங்களிலும் பெட்ரோலின் அடக்க விலை, மாநில அரசுக்கான வாட் வரி, மத்திய அரசுக்கான வரி உள்ளிட்ட தகவல்களை விளக்கி அறிவிப்பு பலகை வைக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. சிபாரிசு அடிப்படையில் வேண்டியவர்களுக்கு பணி வழங்கும் வகையில் சிலரை மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான தேர்வை தள்ளி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளின்படி, சமையல் எரிவாயு விலை ரூ.100 குறைப்பு, பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு போன்றவை இடம் பெற வேண்டும்.
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை பிரித்து கொங்கு நாடு உருவாக்குவது பாஜகவின் எண்ணம் இல்லை. அது பத்திரிகையில் வெளிவந்த செய்தி மட்டுமே.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT