Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செய்த தவறால் - பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பாதிப்பு : தென்காசி ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை, திருவேங்கடம் வட்டம், ஏ.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் வந்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2026-17-ம் ஆண்டு பிரமதரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏ.கரிசல்குளம் கிராம விவசாயிகள் 421 பேர் 895.30 ஹெக்டேரில் சாகுபடி செய்த மக்காச்சோள பயிருக்கு ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தில் காப்பீடாக 2,87,85,662 ரூபாய்க்கான பிரீமியத் தொகை 4,32,334 ரூபாயை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செலுத்தி காப்பீடு செய்திருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிரீமியத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பயனாளிகள் பட்டியலுடன் அனுப்பிய அறிவிப்பு படிவத்தில் எங்கள் கிராமத்தின் பெயரான ஏ.கரிசல்குளம் என்பதற்கு பதிலாக கே.கரிசல்குளம் என தவறுதலாக குறிப்பிட்டு விட்டார்கள். இந்த 2 கிராமங்களும் குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ளன.

அதே ஆண்டு கே.கரிசல்குளம் கிராம விவசாயிகளும் குறைந்த பரப்பளவில் பயிர் காப்பீடு செய்த மக்காச்சோளத்துக்கு பிரீமியத் தொகை செலுத்தி உள்ளனர். இதை காரணம் காட்டி இன்சூரன்ஸ் நிறுவனம் கே.கரிசல்குளம் கிராம விவசாயிகள் பிரீமியம் செலுத்திய குறைந்த பரப்பளவுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கியது. ஏ.கரிசல்குளம் கிராம விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்காமல் அநீதி இழைக்கப்பட்டது.

ஏ.கரிசல்குளம் பிர்காவில் உள்ள மற்ற கிராமங்களுக்கு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பல மனுக்கள் மூலம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர், கடந்த நவம்பர் மாதம் ஏ.கரிசல்குளம் விவசாயிகள் 421 பேருக்கு ஏக்கருக்கு ரூ.13,050 காப்பீட்டுத்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொறுப்பற்ற நடவடிக்கையால் 421 விவசாயிகள் 895.30 ஹெக்டேருக்கு செலுத்திய பிரீமியத்தை 95.30 ஹெக்டேர் என குறைத்து மீண்டும் தவறு செய்துவிட்டார்கள். இதன் காரணமாக காப்பீட்டு நிறுவனம் ஏக்கருக்கு ரூ.13,050 வழங்குவதற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் மட்டும் விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஏ.கரிசல்குளம் கிராம விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x