Published : 11 Jul 2021 03:15 AM
Last Updated : 11 Jul 2021 03:15 AM
வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிழக்கிந்திய படைகளுக்கு எதிரான 1799-ம் ஆண்டு நடைபெற்ற போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டதும் அரசியல் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட திப்பு சுல்தானின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால், கோட்டையில் ஆங்கிலேயர்கள் மற்றும் இந்திய சிப்பாய்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். வேலூர் கோட்டை ஆங்கிலேயர்களின் ஒரு படைத்தளமாகவும் இருந்தது.
அப்போது, ஆங்கிலேயர்களின் படையில் இருந்த இந்திய வீரர்கள் மத அடையாள குறியீடுகளை அணியக்கூடாது, மீசையை மழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சீருடை கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதற்கு, இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக புரட்சியில் ஈடுபடவும் திட்டமிட்டனர்.
இதற்காக, ஆங்கிலேய படையில் இருந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலையில் புரட்சியில் ஈடுபட்டனர். மேலும், கோட்டையில் தங்கியிருந்த ஆங்கிலேய அதிகாரிகளையும், சிப்பாய்களையும் சுட்டுக் கொன்றனர். கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இந்திய வீரர்கள் கோட்டை கொத்தளத்தில் பறந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கி திப்பு சுல் தானின் புலிக்கொடியை ஏற்றினர்.
இந்திய வீரர்களின் புரட்சியை ஆற்காட்டில் இருந்து வந்த கர்னல் கில்லஸ்பி தலைமையிலான படையினர் முறியடித் தனர். இதில், சுமார் 800 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்களின் இந்த புரட்சி, முதல் இந்திய சிப்பாய் புரட்சியாகவும் கருதப்படுகிறது.
வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 10-ம் தேதி சிப்பாய் புரட்சி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சிப்பாய் புரட்சியின் 215-ம் ஆண்டு நினைவு தினமான நேற்று வேலூர் மக்கானில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கமாண்டர் செந்தில் குமார், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT