Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

கரோனா ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோயில்கள் திறப்பு : உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் நேற்று தரிசனம் செய்த பக்தர்கள். (அடுத்த படம்) கோவையில் உள்ள ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்ட வாடிக்கையாளர்கள். படங்கள் : ஜெ.மனோகரன்

கோவை/திருப்பூர்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அரசு நிர்வாகம் அறிவித்த கூடுதல்தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.உணவகங்களில் வாடிக்கையாளர் கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப் பட்டனர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க, கடந்த மே 10-ம் தேதி தமிழகஅரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. கோவை,திருப்பூர் மாவட்டங்களில் தளர்வுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன.

கோவை மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 270-க்கும் மேற்பட்ட பெரிய கோயில்கள் உள்ளன. தவிர, ஏராளமான எண்ணிக்கையில் சிறிய கோயில்களும், தனியார் கட்டுப் பாட்டில் உள்ள கோயில்களும் உள்ளன. நேற்று முதல் தரிசனத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவை கோனியம்மன் கோயில், தண்டுமாரியம்மன் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில், மருதமலை முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். முகக்கவசம் அணிந்து கோயில்களுக்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்பத் திறன் பரிசோதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிருமிநாசினி அளிக்கப்பட்ட பின்னர், உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பூ , பழம், மாலை உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, அபிஷேகத்தின் போதும், பக்தர்கள் உள்ளே அமர அனுமதிக்கப்படவில்லை. திருநீறு, குங்குமம் ஆகியவை தட்டுகளில் வைக்கப்பட்டு, பக்தர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

திருப்பூரில் விஸ்வேஸ்வர சாமி கோயில், வீரராகவ பெருமாள்கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களிலும் நேற்று வழிபாடு நடத்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

உணவகங்கள் திறப்பு

கோவை மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் 1000-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய உணவகங்கள் உள்ளன. தளர்வுக்கு முன்பு உணவகங்களில் பார்சல் மூலம் மட்டுமே உணவுகள் வழங்கப்பட்டன. நேற்று முதல் அனைத்து உணவகங்களிலும் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர அனுமதிக்கப்பட்டனர். கேளிக்கை விடுதிகள்,உடற்பயிற்சிக் கூடங்கள், தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், அருங்காட்சியகங்கள், யோகா பயிற்சிநிலையங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவையும் மக்கள் பயன் பாட்டுக்கு திறக்கப்பட்டன. துணிக் கடைகள், நகைக்கடைகளில் 50 சதவீதம் அளவுக்குமட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேற்கண்ட இடங்களில் குளிர் சாதன வசதி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புரூக்பீல்டு மால், சரவணம்பட்டியிலுள்ள புரோஜோன் மால், அவிநாசி சாலையிலுள்ள ஃபன் மால் ஆகிய பெரிய மால்கள் அனைத்தும் நேற்றுதிறக்கப்பட்டன. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க ஏற்படுத்தப்பட்டு இருந்த இ-பதிவு, இ-பாஸ் முறை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x