Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM
எலவனாசூர்கோட்டையில் மின் மாற்றி அமைப்பதற்காக 50 ஆண்டு கால மரங்களை வெட்டி செங்கல் சூளைக்கு விற்பனை செய்ய முயன்றதாக மின்வாரிய அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.
உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட எலவனாசூர் கோட்டையை அடுத்த கீழப்பாளையம் கிராமத்தில் உள்ள நீர் மூழ்கி தக்கா என்ற இடத்தில் சாலையோரம் புதிதாக மின்மாற்றி அமைப்பதற்காக, கீழப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து புதிதாக மின்கம்பங்கள் நடப்பட்டன.
இதற்காக சாலை யின் ஓரம் உள்ள மரங்கள் வெட் டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்கள் முறையான முன்னறிப்பின்றி, வருவாய்த் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மின் வாரியத்தினர் தன்னிச்சையாக மரங்களை வெட்டி, செங்கல் சூளைக்கு விற்பனை செய்து அதனை லாரியில் ஏற்றிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் லாரியை மடக்கியதால், அவர்கள் மரம் வெட்டப்பட்ட இடத்திலேயே போட்டு விட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உளுந்தூர் பேட்டை வட்டாட்சியரிடம் கேட்டபோது, "மரம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. மரம் வெட்டப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டாட்சியர் உத்தரவுபடி வருவாய் ஆய்வாளர் அவ்விடத்தை பார்வையிட்டு அறிக்கை அளித்துள்ளார். நாளைவெட்டப்பட்ட மரம் ஏலம் விடப் படும்" என்றார்.
இதையடுத்து மின்வாரிய இளநிலைப் பொறியாளரிடம் கேட்டபோது, "மின்கம்பம் நடுவதற்கு இடையூறாக மரம் இருந் ததால், மரத்தை வெட்டினோம். நாளை வருவாய்த் துறையினர் மரத்தை ஏலம் விடுவர். விற்பனை செய்ய முயற்சித்தாகக் கூறுவது தவறு" என்றார்.
அதேபகுதியைச் சேர்ந்த முகமதுஇக்பால் கூறுகையில்," 50 ஆண்டு கால மரங்களை உரிய துறையினருக்கு தெரிவிக்காமல், முறையாக அறிவிப்பு ஏதும் செய்யாமல் எப்படி மரத்தை வெட்ட முடியும்? மின்வாரிய பொறியாளரும், வருவாய் வட்டாட்சியரும் மரங்களை வெட்டி சூளைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து தான் மக்கள், மரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்தனர். அதன் பின்னர் தான் அவர்கள் மரங்களை வெட்டிய இடத்திலேயே போட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT