Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

பாரூர் ஏரியில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு : 2397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

பாரூர் ஏரியில் இருந்து முதல்போக பாசனத்துக்காக நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.

கிருஷ்ணகிரி

பாரூர் ஏரியில் இருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து, முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று பாரூர் பெரிய ஏரியில் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்காக 135 நாட்களுக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.மதியழகன் முன்னிலை வகித்தார். அப்போது ஆட்சியர் பேசியதாவது:

பாரூர் பெரிய ஏரியில் தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் கால்வாயில் வந்துகொண்டிருக்கும் நீர் வரத்தைக் கொண்டும் மேலும், பருவ மழையை எதிர்நோக்கியும் இன்று (நேற்று) முதல் வருகிற நவம்பர் மாதம் 12-ம் தேதி முடிய 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதன்படி ஏரியில் கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 20 கனஅடி வீதமும் என மொத்தம் 70 கன அடி வீதம் 135 நாட்களுக்கு முதல் 5 நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டு பிறகு முறைப்பாசனம் வைத்து 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதன் மூலம் பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள 2397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்நிகழ்வில் முன்னாள் எம்பி சுகவனம், திமுக மாவட்ட துணை செயலாளர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாயி அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், பாசன விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x