Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘நீட் வேண்டாம்’ என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.
நாம் விரும்பா விட்டாலும் உச்சநீதிமன்ற வழிகாட்டு தலின்படி இந்தியாமுழுவதும் இச்சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அல்லது விருப்பப்படும் மாநிலங்கள் நடைமுறைப்படுத்தலாம் என்று திருத்தம் கொண்டு வர வேண்டும்.
‘நீட்டை விலக்குகிறேன்’ என்று சொல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு கொடுக்கும் பரிந்துரையால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாமல் போகுமா? என்பதை முதல்வர், சுகாதாரத்துரை அமைச்சர் விளக்க வேண்டும். தெரிந்தே தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை இந்த அரசு செய்து கொண்டு வருகிறது.
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்ற அதிமுக அரசு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கியது. இதனால் 450 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 550 மாணவர்கள் சேர முடியும்.
நீட் இருந்தால் தான் இந்த இட ஒதுக்கீடு செல்லும். நீட் இல்லாவிட்டால் இந்த இட ஒதுக்கீடு செல்லுபடி ஆகாது. அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு தரப்படும் என்று அறிவிக்க இருப்பதாக அறிகிறோம்.
அப்படி செய்தால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. ‘நீட்டை நீக்குவோம்’ என்று கூறி இந்த அரசு மாணவர்களை குழப்ப வேண்டாம்.
சசிகலாவால் முடியாது
மத்திய தணிக்கை குழு அறிக்கையை காரணம் காட்டிஅதிமுக ஆட்சியில் முறைகேடுநடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டுகிறது. மத்திய தணிக்கைத் துறை அறிக்கையின்படி ரூ.1.75 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றதாக ஆ.ராசா, கனிமொழி இருவரும் சிறையிலிருந்தனர். தற்போது பிணையில் உள்ளனர்.அவர்கள் மீதான மேல் முறையீட்டுமனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய தணிக்கைத்துறையின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் ஆ.ராசா, கனிமொழி மீது திமுக ஏன் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை?
ஜெயலலிதாவின் வேலைக்காரராக சசிகலா இருந்தார். ஜெயலலிதா இறந்த பின் அவர் சென்று விட்டார். பினாமி கட்சியான தினகரனை வெற்றிபெற வைக்க முடியாத சசிகலாவால், அதிமுகவை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT