Published : 01 Jul 2021 03:16 AM
Last Updated : 01 Jul 2021 03:16 AM
மதுரை காப்பகத்தில் தாயுடன் தங்கியிருந்த ஒரு வயது ஆண் குழந்தை மாயமானது. அக்குழந்தை கரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடி ரூ. 5 லட்சத்துக்கு காப்பக உரிமையாளர் விற்றது தெரியவந்தது. அக்குழந்தையை தனிப்படை போலீஸார் நேற்று மீட்டனர்.
மேலூர் அருகே சேக்கி பட்டியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (22). மனவளர்ச்சி குன்றியவர். ஆதரவற்ற நிலையில் இருந்த இவரை அப்பகுதி முதியவர் ஒருவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை, 3 வயது மற்றும் 1 வயதில் இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
முதியவர் இறந்து விட்டதால் ஐஸ்வர்யா ஆதரவின்றி தவித்தார். இதுபற்றி அறிந்த மேலூர் பகுதிசமூக ஆர்வலர் அசாருதீன், மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே, ‘இதயம் டிரஸ்ட் ’என்ற பெயரில் மாநகராட்சி கட்டிடத் தில் முதியோர் காப்பகம் நடத்தும் சிவக்குமார் என்பவரிடம் ஐஸ்வர்யாவின் நிலைமையை விவரித்து, காப்பகத்தில் அவரது 3 குழந்தைகளுடன் தங்க ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில், அவரது ஒரு வயதான குழந்தை மாணிக்கத்தை சில நாட்களுக்கு முன்பு காணவில்லை. இது பற்றி ஐஸ் வரியா அசாருதீனிடம் தெரி வித்தார்.
அசாருதீன் சிவக்குமாரிடம் கேட்டபோது, குழந்தைக்கு கரோனா பாதித்ததால் ஜூன் 13-ம் தேதி முதல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள் ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை பற்றி விசாரித்தபோது, அன்றைய தினம் குழந்தை இறந்து விட்டதாகவும், தத்தனேரி மயானத்தில் புதைத்து விட்டதாகவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
குழந்தையை அடக்கம் செய்த தாகக் கூறப்படும் இடத்தில் காரியம் செய்ய தாயார் ஐஸ்வர்யாவை காப்பக ஊழியர் கலைவாணி அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் சந்தேகம் அடைந்த அசாருதீன் அரசு மருத்துவமனையில் விசாரித்த போது, சிவகுமார் குறிப்பிட்ட தேதியில் கரோனா பாதித்த ஒரு வயது குழந்தை யாரும் சேர்க்கப் படவில்லை எனத் தெரிந்தது. மேலும் தத்தனேரி மயானத்திலும் உடல் புதைக்கப்படவில்லை எனத் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அசாருதீன் தல்லாகுளம் போலீஸில் புகார் செய்தார்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார். ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், காவல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை, தத்தனேரி மயானத்தில் நேற்று விசாரித்தனர்.
காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி என்பவர் மூலம் குழந்தை புதைக்கப்பட்டதாகக் கூறும் இடத்தை ஆய்வு செய் தனர். அங்கு உடல் பாதித்து இறந்த வேறொரு குழந்தை புதைக்கப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவா ணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அக்குழந்தை மதுரை இஸ்மாயில் புரத்தை சேர்ந்தவரிடம் ரூ. 5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் நேற்று மாலை அக்குழந்தையை மீட்டனர். இதற்கிடையே அக்காப்பகத்தில் இருந்த 2 வயது பெண் குழந்தையை சக்கிமங்கலம் கல்மேடு பகுதியில் விற்றுள்ளனர். அக்குழந்தையையும் தனிப்படை போலீஸார் மீட்டனர்.
தலைமறைவான காப்பக உரிமையாளர் சிவக்குமார், காப்பக ஊழியர் மாதர்ஷா ஆகியோரை தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்தக் காப்பகம் மூடப்பட்டு அங்கிருந்த குழந்தைகள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்த நோயாளிகளை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT