Published : 01 Jul 2021 03:18 AM
Last Updated : 01 Jul 2021 03:18 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை : அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர் களுக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடை பெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தற்போது படிப்படியாக கட்டுக்குள் வந்துள் ளது. பல்வேறு தளர்வுகளும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி யுள்ளனர்.

இருப்பினும், கரோனா முழுமையாக நம்மைவிட்டு விலக வில்லை என்பதை பொது மக்கள் உணர வேண்டும். கரோனா தடுப்பு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை நாம் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக நகர் பகுதிகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், ஜெனரல் ஸ்டோர்ஸ், ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடி வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதில், பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடை வெளியை பின்பற்றாமலும் சென்று வருவது வேதனையளிக்கிறது. பொதுமக்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் மீண்டும் கரோனா தொற்றுக்கு நாமே வழிவகுப்பதை போல் ஆகிவிடும். எனவே, அரசு அனைத்துத்துறை அதிகாரிகளும் கரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வை மீண்டும் தொடங்க வேண்டும்.

அனைத்து நகராட்சி பகுதி களில் ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், காவல் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்க வேண்டும். அதேபோல, பேரூராட்சி பகுதிகளில் வருவாய்த் துறையினர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

இக்குழுவினர் நகரின் முக்கியப்பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மிக தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, வாரச்சந்தை, உழவர் சந்தை, மார்க்கெட் மற்றும் இறைச்சிக்கடைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து, விதிமுறை களை மீறும் நிறுவனங்களுக்கு தேவைப்பட்டால் ‘சீல்' வைக்க லாம்.

அதேபோல, முகக்கவசம் அணியாமலும், சமூக இடை வெளியை பின்பற்றாமல் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் ஏற்கெனவே இது போன்ற குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மந்தமாகவே செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதை துரிதப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பரவலாக காணப்படுகிறது. இதனை, காவல் துறையினர் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் இணைந்து ஒழுங்கப்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x