Published : 27 Jun 2021 03:14 AM
Last Updated : 27 Jun 2021 03:14 AM

கரோனா பாதிப்பு தீவிரமடைந்த நோயாளிகளுக்காக - தோப்பூர் அரசு மருத்துவமனையில் விரைவில் ‘ஐசியூ வார்டு’ :

மதுரை

கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக செயல்படும் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் ஐசியூ வார்டு அமைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுரை அருகே தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகமாக கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கைகள் உட்பட 250 படுக்கைகள் மட்டுமே இருந்தன. கரோனா நோயா ளிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அண்மையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால், இந்த மருத்துவமனையில் 5 லிட்டர் முதல் 10 லிட்டர் கொள்ளளவு உள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் மட்டுமே இருப்பதால், மிதமான கரோனா பாதிப்புள்ள நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

நோய் பாதிப்பு தீவிரமடையும் நோயாளிகளுக்கு உடனடியாக ஐசியூ வார்டுடன் கூடிய வெண்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும். கூடுதல் உயர் அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்களும் தேவைப்படும். இவை இரண்டும் இந்த மருத்துவமனையில் இல்லை.

இதனால் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர்.

அவ்வாறு செல்லும் வழியில் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதனால், தோப்பூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக வெண்டிலேட்டர், உயர் அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஐசியூ வார்டு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் தற்போது தோப்பூர் காசநோய் அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

அதற்கான மருத்துவர்கள், பணி யாளர்களை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் இருந்து அனுப்பாமல், புதிதாக பணி நியமனம் செய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், தோப்பூர் அரசு மருத்துவமனையில் தற்போது ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. இங்கு கூடுதலாக 4 ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x