Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகள் மின்னணு பதிவேடுகளாக மாற்றும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1.7.2020 முதல் அனைத்துத் துறைகளில் உள்ள அனைத்து பட்டியல்களும் இணைய வழிமூலம் தயாரித்து ஏற்பளிப்பு செய்யப்படுகிறது. தற்போது அனைத்து ஓய்வூதிய பலன்கள், அரசின் அனைத்து வரவினங்களும் இணைய வழியில் செலுத்தும் முறை, அனைத்து அரசு வைப்புநிதிகளும் இணைய வழியில் பராமரித்தல் போன்ற பணிகள் படிப்படியாக நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் 2018-ம் ஆண்டு வரை மின்னணு பணிப்பதிவேடுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை, நடப்பு தேதிவரை புதுப்பிக்கும் பணியை வரும் 25-ம் தேதிக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை மூலம் கருவூலம் மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் இணைக்கப்படும்.
இதன் மூலம் அரசின் வரவு செலவு பண பரிமாற்றம் அனைத்தும் இணையவழியில் விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தால் பணியாளர்களின் பணிச்சுமை மற்றும் காகிதப் பயன்பாடு முற்றிலும் குறைக்கப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட கருவூல அலுவலர் இளங்கோபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசின் வரவு செலவு பண பரிமாற்றம் அனைத்தும் இணைய வழியில் விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். காகிதப் பயன்பாடு முற்றிலும் குறைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT