Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM
கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சென்ற தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதால், பள்ளியில் படித்து வரும் அவரது மகன் குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் பலவன் சாத்து குப்பம் ஒற்றை வாடை தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி ஜெயசீலன் (57). இவரது மனைவி இந்திரா (50). இவர்களுக்கு, ஜனனி (15) என்ற மகளும், யஸ்வந்த் (13) என்ற மகனும் உள்ளனர். மாற்றுத் திறனாளியான ஜெயசீலன் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பாக காய்கறி கடை நடத்தி வந்தார். இதில், கிடைக்கும் வருமானத்தை கொண்டே தனது தாய், மனைவி, மகள் மற்றும் மகனை பராமரித்து வந்தார். வேலூரில் உள்ள தனியார் நிதியுதவி பள்ளியில் ஜனனி 10-ம் வகுப்பும், யஸ்வந்த் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 11-ம் தேதி கரோனா அறிகுறிகளுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயசீலன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது, அவருக்கு கரோனா பரிசோதனை செய்த மருத்துவ மனை நிர்வாகம் ஜெயசீலனுக்கு ‘நெகடிவ்’ என தெரிவித்து அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முன்வந்தனர்.
ஆனால், ஜெயசீலனின் மனைவி இந்திரா இறுதி சடங்கு செய்ய எங்களிடம் வசதியில்லை, உறவினர்களும் இல்லை எனக் கூறியதால் மருத்துவமனை நிர்வாகமே ஜெயசீலன் உடலை நல்லடக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
ஜெயசீலன் உயிரிழந்த சில நாட்களில் அவரது தாயாரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்ததால் ஜெயசீலன் மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் பேரதிர்ச்சிக்குள்ளாகினர்.
ஜெயசீலன் உயிரிழந்ததால் அவரது மகன் 8-ம் வகுப்பு படித்து வந்த யஸ்வந்த் தனது தந்தை செய்து வந்த காய்கறி வியாபாரத்தை செய்து வருகிறார். இதனால், தனது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவர் யஸ்வந்த் கூறும்போது, "எனது தந்தை, பாட்டி என அடுத்தடுத்து 2 உயிரிழப்பு சம்பவங்கள் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததால் எங்களின் கல்வி கனவு பாதியில் சிதைந்துபோனது.
குடும்பத்தை காப்பாற்ற நான் வியாபாரத்துக்கு வந்ததால் எங்கள் கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பும், உதவியும் கிடைத்தால் நிச்சயம் நாங்கள் தொடர்ந்து படிப்போம்’’ என்றார் ஆர்வத்துடன்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் கள் கூறும்போது, “ஜெயசீலன் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி. கடைசிவரை உழைத்து வாழ்ந்தவர். தற்போது, அவர் உயிருடன் இல்லை. அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தையும், அவரதுகுழந்தைகளின் கல்விச்செலவை யும் தமிழக அரசு ஏற்க முன்வர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT