Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM
வேலூர் அருகேயுள்ள மேல் மொணவூரில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ஒருங்ணைந்த மொத்த வாணிப வணிக வளாகம் அமையவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வணிக வளாகத்துக்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்கு பஜார் பகுதியில் உள்ள அரிசி மண்டி, நவதானிய மண்டி, வெல்லம் மண்டி, காய்கறி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. வியாபாரத்துக்காக வந்து செல்லும் சரக்கு வாகனங்களால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மேல்மொணவூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே வேலூர் மொத்த வாணிப எஸ்டேட் லிமிடெட் என்ற சங்கத்துக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தில் சுமார் ஆயிரம் கடைகளுடன் கூடிய மொத்த வாணிப வணிக வளாகம் கட்டப்படவுள்ளது.
இந்த வளாகம் அமைந்த பிறகு சென்னை மற்றும் பெங்களூரு சாலை வழியாக பொருட்களை எடுத்துச் செல்வதில் எந்த சிரமமும் ஏற்படாது என கூறப்படுகிறது. இந்த வணிக வளாகத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வணிக வளாகம் அமைய உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, வணிக வளாகம் அமையவுள்ள இடத்துக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வியாபாரிகளிடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT