Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM
வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தனது உரையில் ஆளுநர் அறிவித்துள்ளதை வரவேற்று செய்யாறில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை பாதுகாக்க, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அப்போதுதான், விவசாயத்தையும், விவசாயி களையும் பாதுகாக்க முடியும் என்பது அவர்களின் கருத்து. இது தொடர்பாக பல்வேறு கட்ட நிலைகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை யுடன் நேற்று காலை தொடங்கியது. அப்போது, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் விவசாயம் மேம்படும் என நம்பிக்கையுடன் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் அவர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உழவர் பேரவை சார்பில், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற ஆளுநர் அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதன் மூலம் வேளாண்மை கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தனி நபர் பயிர் காப்பீடு, நேரடி நெல் கொள்முதல் நிலையம், உலர்களம் அமைத்தல், சேமிப்பு கிடங்கு வசதி, வாடகை இயந்திரங்கள் மையம் போன்றவற்றின் மூலம் தனி நபர் வருவாயை உயர்த்தும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை என்ற ஆளுநரின் அறிவிப்பை வரவேற்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT