Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மூன்று ஆக்சிஜன் கொள்கலன்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட குமாரவேல் பாண்டியன், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்தும் அதை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தற்காலிக கரோனா சிகிச்சை மையம் மற்றும் ஆக்சிஜன் கொள்கலன் பிரிவுகளை ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளி களின் உறவினர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனை வளாகத்தில் அதிக செடிகளை நடவும், தூய்மையாக பராமரிக் கவும் உத்தரவிட்டார். வேலூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனையில் குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகள் இருப்பதால் ஆக்சிஜன் படுக்கை களின் எண்ணிக்கையும் 500-க்கும் மேல் காலியாக உள்ளன. எனவே, ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
அப்போது, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஆட்சியரிடம் ‘‘அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுநீர் அருகே உள்ள சப்தலிபுரம் ஏரியில் கலக்கிறது. இதனால், ஏற்படும் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து அளிக்குமாறு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் செல்வி, பயிற்சி ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக மருத்து வக் கல்லூரி டீன் மருத்துவர் செல்வி கூறும்போது, ‘‘மருத்துவ மனையில் உள்ள இருதயம், நரம்பியல், சிறுநீரக பிரிவுகளை மேம்படுத்தும் திட்டம் தொடர்பான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது’’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT