Published : 06 Jun 2021 03:13 AM
Last Updated : 06 Jun 2021 03:13 AM
ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது மையத்தில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சை முறைகள் மற்றும் சித்த மருந்துகளின் விவரங்கள் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கோ.செல்வமூர்த்தி விளக்கம் அளித்தார்.
சிகிச்சை குறித்து சித்த மருத்துவ அலுவலர் கூறியதாவது:
மையத்தில் இரண்டு சித்த மருத்துவர்கள், ஒரு மருந்தாளுனர், இரண்டு செவிலியர்கள், ஒரு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒரு உதவியாளர் என மொத்தம் 7 பேர் பணியாற்றுவர். நோயாளிகளுக்கு முதலில் நுழைவு பெட்டகம் எனப்படும் மருந்து பெட்டகம் வழங்கப்படும். இப்பெட்டகத்தில் தாளிசாதி சூரண மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, அமுக்கரா சூரண மாத்திரை, பிரமானந்த பைரவ மாத்திரை, திப்பிலி ரசாயனம் ஆகிய மருந்து பொருட்கள் இருக்கும்.
காலை மற்றும் மாலை வேளைகளில் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். அவ்வப்போது ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த கரோனா நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீர் வழங்கப்படும். கிராம்பு, ஓமம், மஞ்சள், மிளகு, இஞ்சி மற்றும் அதிமதுரம் உள்ளிட்ட மூலிகை பொருட்களை சேர்த்து கசாயமாக காய்ச்சி 60 மில்லி அளவை பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இரு தடவை அருந்தினால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். மேலும் பிராணயாமம், மூச்சுப் பயிற்சி மற்றும் லிங்க முத்திரை, நாத சுத்தி பயிற்சி ஆகிய பயிற்சிகள் கரோனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைகுமார், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT