Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM
தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலமான தற்போது தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே, குளிர்ந்த காற்று வீசும். இந்த அறிகுறியைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டுவர்.
அடிக்கடி பெய்த மழை காரணமாக கோடை காலத்தில் கூடதென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலமான தற்போது, கோடையைப் போல வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.
நேற்று காலை வரை குண்டாறுஅணையில் 5 மி.மீ., அடவிநயினார் அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. கோடை காலத்தில் பெய்த மழையால், அணைகளில் ஓரளவுநீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
கடனாநதி அணை நீர்மட்டம் 74 அடியாகவும், ராமநதிஅணை நீர்மட்டம் 63.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம்59.39 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 83.50 அடியாகவும் இருந்தது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றாலம் வியாபாரிகள் தெரிவிக் கின்றனர்.
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்டது. புதிய மாவட்டம் உருவான பிறகு குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறவில்லை. இந்தஆண்டாவது சாரல் திருவிழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நேற்று மாலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
நெல்லையில் பரவலாக மழை
திருநெல்வேலியில் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்துவந்தது. நேற்று காலையிலிருந்து பிற்பகல் வரையிலும் வெப்பம் அதிகமிருந்தது. இந்நிலையில், மாலையில் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் மிதமானமழை பெய்தது. கொண்டாநகரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது.
மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் விவரம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்):
பாபநாசம்- 135.25 அடி (143), சேர்வலாறு- 140.75 அடி (156), மணிமுத்தாறு- 88.75 அடி (118), வடக்கு பச்சையாறு-41.20 அடி (50), நம்பியாறு- 12.43 அடி (22.96), கொடுமுடியாறு- 28 அடி (52.25). கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 1,403 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 400 கனஅடி, வடக்கு பச்சையாறு அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மின்வாரியம் சார்பில் மின்கம்பிகளையொட்டி வளர்ந்துள்ள மரங்களின் கிளைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் வீரபத்திரன் தலைமையிலும், வண்ணார்பேட்டையில் மின்வாரிய உதவி பொறியாளர் முத்துராமலிங்கம் தலைமையிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT