Published : 04 Jun 2021 03:16 AM
Last Updated : 04 Jun 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் ஊர் சுற்றி வந்தவர்களிடம் இருந்து 25 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலை குறைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவையில்லாமலும், அநாவசியமாக யாரும் வெளியே வரக்கூடாது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல, மாவட்ட காவல் துறை சார்பில் 45 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தேவையில்லாமல் வெளியே வருவோர்களுக்கு அபராதமும், அதையும் மீறி வருவோர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் நகர காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் காவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்தபோது அவர்களில் ஒருமுறைக்கு பல முறை எச்சரித்தும் தேவை யில்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றி வந்த 15 பேரிடம் இருந்து இரு சக்கர வாகனங்களை நகர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல, அதிக ஆட்களை ஏற்றி வந்த 4 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
அதேபோல, நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர், லட்சுமிபுரம், கொத்தூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் நாட்றாம்பள்ளி காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தபோது அவ் வழியாக அவசியம் இல்லாமல் வந்தவர்களிடம் இருந்து 10 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுரை வழங்கி வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment