நகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு :

நகராட்சி சார்பில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு :

Published on

பெரம்பலூர் நகரில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று தொடங்கியது.

பெரம்பலூர் நகரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நகராட்சியின் சார்பில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை நேற்று தொடங்கினர். அதன்படி, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் எம்எல்ஏ ம.பிரபாகரன் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி, சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப் பையா கூறியது:

கிருமிநாசினியை காற்றில், மண்ணில் தெளிப்பதால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை தெரிவித்துள்ளன. இதனால், சுற்றுச்சூழலுக்கு கேடுதான் ஏற்படுகிறது. தமிழகத்தில் கிருமிநாசினி, குளோரின் பவுடர் தெளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனாலும், இந்த அறிவிப்பை அரசு அதிகாரிகள் கடைபிடிக்க மறுப்பது துரதிருஷ்டவசமானது என்றார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன்கூறியது:

தற்போது ஒத்திகை மட்டுமே பார்க்கிறோம். இதற்கென நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறியது குறித்து எனக்கு தகவல் தெரியாது. தற்போது, நீங்கள் கூறியதன் மூலமே இதை அறிகிறேன். இனி ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்க மாட்டோம் என்றார்.

நாகை நகராட்சியில்...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் குழுவினரின் செயல் திட்டத்தால் உருவாக்கப்பட்ட ராட்சத ட்ரோன் கருவி மற்றும் நவீன கிருமிநாசினி தெளிப்பான் கருவிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் ஏகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in