Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM
சென்னை எழும்பூரில் தமிழககாவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசியை நேற்று முன்தினம் இரவு ஒரு நபர் தொடர்பு கொண்டு, "சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்" என கூறிவிட்டு, தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளநடிகர் அஜித் வீட்டுக்குச் சென்று,சோதனை நடத்தினர். எந்த வெடிபொருளும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியைப் பரப்பும் வகையில் அந்த தொலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர்.
மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்ட செல்போன் எண்ணைக் கொண்டு, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விசாரித்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் (26) என்பது தெரிய வந்தது. இவர் சற்று மன நலம் பாதித்தவர். போலீஸார், உடனே அந்த இளைஞரின் குடும்பத்தினரை அழைத்து, அவர் இதுபோன்று செய்யாமல் இருக்க, உரிய அறிவுறுத்தல்களை வழங்கினர்.
இந்த இளைஞர் ஏற்கெனவே கடந்த 22-ம் தேதி தமிழக முதல்வர்ஸ்டாலின் வீட்டிற்கும் இது போன்று மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு முன் தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் இவர் சிக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.
தொடர்ந்து இதுபோல தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் புவனேஸ்வரைக் கட்டுப்படுத்துவது குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, “சற்று மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள்நினைவில் உள்ளன. தொலைபேசி கிடைத்தால் யாரோ ஒருவருக்கு இதுபோன்று மிரட்டல் விடுக்கிறார்.
இவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடுமாறு விழுப்புரம் ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியரின் உத்தரவுக்குப் பின் சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அவர் முறையான உளவியல் ஆற்றுப்படுத்துதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT