Published : 02 Jun 2021 03:15 AM
Last Updated : 02 Jun 2021 03:15 AM
திருப்பத்தூர் அருகே குடிசை தொழிலாக சாராயம் காய்ச்சி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்த தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் செல்லரைப்பட்டி கிராமத்தில் சாராய விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து, கந்திலி காவல் துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (33) என்பவர் தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதை பாக்கெட்டுகளில் அடைத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருவது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனி மற்றும் கந்திலி காவல் துறையினர் கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.
அதில், கோவிந்தசாமி தனது வீட்டில் சமையல் அறையிலேயே காஸ் அடுப்பு கொண்டு சாராயம் காய்ச்சி வந்ததும், வீட்டில் காலியாக உள்ள இடத்தில் பேரல்களில் சாராய ஊறல்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அங்கிருந்த 13 பேரல்களில் இருந்து சாராய ஊறல்களை காவல் துறையினர் கைப்பற்றினர். வீட்டில் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 250 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சாராயம் காய்ச்சுவதை குடிசை தொழிலாக செய்து வந்த கோவிந்தசாமியும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி வள்ளி (30) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment