Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM
நேரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்றி பொருள் விநியோகம் செய்ய வேண்டும், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காய்கறி விற்பனை மற்றும் மளிகை பொருட்களை காலை 6 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் முறையான அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டுமே இந்த சேவையை செய்ய இயலும்.
அனுமதி பெறாத வாகனங்கள் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. அதுபோல் கடைகளில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, மொத்த வியாபாரம் செய்வோர் சில்லரை வணிகர்களிடம் ஆர்டர் பெற்று அதனை வாகனம் மூலமாக நேரடியாக அவர்களின் கடைகளுக்கு சென்று வழங்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி, அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பணியாளர்கள் முறையாக முகக்கவசம், கையுறைகளை அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பாதுகாப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், நேர கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT