Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM
தமிழகத்தில் கரோனா பரவலைகட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று முன்தினம் 1,800 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் வந்துசேராததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறைஅதிகாரிகள் கூறும்போது, “தென்காசி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் காலியாகி விட்டன.விரைவாக தடுப்பூசி செலுத்தியமாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு மட்டும் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
ஏற்கெனவே முதல் தவணை கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களில் ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கால அவகாசம் நிறைவடையும் நிலையில் உள்ளதால் அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் உள்ளது. எனவே, தடுப்பூசி சிறப்புமுகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி தடுப்பூசி வந்தால் மட்டுமே மக்களுக்கு செலுத்த முடியும்” என்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலையின் தீவிரம் அதிகமாக உள்ளது.தடுப்பூசி மட்டுமே கரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக உள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
நெல்லையிலும் தட்டுப்பாடு
திருநெல்வேலி மாவட்டத்திலும் நேற்று தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒவ்வொருமையத்துக்கும் சுமார் 50 டோஸ்கள்மட்டுமே தடுப்பூசி வந்துள்ளது. விரைவில் தடுப்பூசிகள் காலியானதால் ஏராளமான இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT