Published : 29 May 2021 03:13 AM
Last Updated : 29 May 2021 03:13 AM

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக - சேலம், ஈரோடு, நாமக்கல்லில் 2451 வாகனங்கள் பறிமுதல் :

சேலம் / ஈரோடு / நாமக்கல்

ஊரடங்கை மீறியதாக சேலம், ஈரோடு, நாமக்கல்லில் 2451 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டப் பகுதிகளில் நேற்று ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 785 நபர்கள் மீது மாவட்டப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், 4 சக்கர வாகனங்கள் உள்பட 353 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாமல் நடமாடிய 289 நபர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகள், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பதிவு பெற்ற வாகனங்களும், உரிய காரணங்களுக்காக பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து அனுப்புகின்றனர்.

தேவையற்ற காரணங்களுக் காக வெளியில் சுற்றித்திரியும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாத வர்களுக்கும் அபராதம் விதிக்கப் படுகிறது. நேற்று முன்தினம் ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 1100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 1100 இருசக்கர வாகனங்கள், 40 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் வாகனத் தணிக்கை செய்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களில் தேவையின்றி சுற்றிய 950 இரு சக்கர வாகனங்கள், 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,951 பேரிடம் இருந்து ரூ.3.90 லட்சத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x