Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM

மளிகைப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் வணிகர்கள் மீது நடவடிக்கை : வணிகர் சங்க பேரமைப்பு எச்சரிக்கை

நாமக்கல்

மளிகைப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் பொதுமக்களுக்கு தடையின்றி மளிகைப் பொருட்கள் கிடைக்க நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன்பலனாக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று (டோர் டெலிவரி) வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

விருப்பம் உள்ள மளிகைக் கடை உரிமையாளர்கள், அதற்காக முறையான அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதி அட்டை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற்றுக் கொள்ளலாம். இதுபோல் மளிகைப் பொருள் மொத்த விற்பனையாளர்கள் பொருட்களை நகராட்சியின் அனுமதி பெற்ற சில்லரை வணிகர்களின் இடத்திற்கே சென்று வழங்க வேண்டும்.

இதற்கான அனுமதியை பெற விண்ணப்ப கடிதம், கடைக்கான அரசு அனுமதி சான்று, டோர் டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனத்தின் விவரம், ஓட்டுநர் விவரம், கடை ஊழியரின் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். பொருட்களை வழங்குவோர் இரட்டை முகக்கவசம் அணிந்தும், கையுறைகள் அணிந்தும், பொதுமக்களுடன் போதிய சமூக இடைவெளி கடைபிடித்தும் பொருட்களை பாதுகாப்புடன் வழங்க வேண்டும்.

நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் வணிகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மளிகைப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள், வணிகர் சங்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுவர். தவிர, விற்பனை அனுமதியை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு வணிகர் சங்கம் பரிந்துரை செய்யும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x