Published : 25 May 2021 03:13 AM
Last Updated : 25 May 2021 03:13 AM

முழுஊரடங்கின்போது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி - சாலையில் சுற்றியவர்களிடம் கை கூப்பி வேண்டிய போலீஸார் :

சேலம் 5 ரோடு பகுதியில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார் கை கூப்பி வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அடுத்தபடம்: திருச்செங்கோட்டில் நேற்று காரில் வந்தவர்களை காவல் துறை அதிகாரி ஒருவர் கையெடுத்து கும்பிட்டு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பினார்.

சேலம் / நாமக்கல் / ஈரோடு

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில், தேவையின்றி வெளியே சுற்றியவர்களிடம், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி சேலம் போலீஸார் கை கூப்பி மன்றாடி கேட்டுக் கொண்டனர்.

கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகரம் முழுவதும் 113 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல, மாநகரம் முழுவதும் போலீஸார் முக்கிய சாலைகளை தடுப்புகளால் அடைத்து, பொதுமக்கள் நடமாட்டத்தை தடுத்து வருகின்றனர்.

மேலும், ஆட்சியர் அலுவலகம், சின்னக் கடை வீதி, பெரிய கடைவீதி, சீலநாயக்கன்பட்டி, நான்கு ரோடு, ஐந்து ரோடு, சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம், புதியபேருந்து நிலையம் என மாநகரம் முழுவதும் 300 போலீஸார் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை கண்டறிந்து, அவர்களிடம் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் நேற்று காலை ஊரடங்கு விதி முறைகளை மீறி பலர் வாகனங்களில் சுற்றித் திரிந்தனர். வாகனங்களை நிறுத்திய போலீஸார், தேவையில்லாமல் வெளியிடங்களில் சுற்றித்திரிவதால், கரோனா பரவல் அதிகரிக்கும். எனவே, வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி இரு கரம் கூப்பி மன்றாடி கேட்டுக் கொண்டனர்.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு, தேவைகள், தகவல்கள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் மாவட்ட காவல்துறை உதவி மைய எண்கள் (94981-00970, 0427-2272929) என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் கண்காணிப்பு

நாமக்கல் மாவட்டம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், லாரி, ரிக் பட்டறைகள், கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

மருத்துவமனை, மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்திருந்தன. ஓட்டல்களில் பார்சல் உணவு மட்டும் விநியோகிக்கப்பட்டன. அவசியத் தேவைகளைத் தவிர வெளியே வரும் நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விதிமுறை மீறி தொடர்ந்து வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என காவல் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஈரோட்டில் 1200 போலீஸார் கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் வகையில், 1200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் தடுப்புகளை அமைத்து நேற்று கண்காணித்தனர். உரிய காரணங்கள் இல்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

முழு ஊரடங்கால் காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகள், மளிகை, ஜவுளி, தேநீர் கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் போக்குவரத்தும் முழுமையாக முடங்கி இருந்தது. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. அம்மா உணவகங்கள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன. வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்கள், சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x