Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM
விழுப்புரம் மாவட்டத்தில் முதியவர்கள் 3 பேரை பராமரிக்காத வாரிசுகளுக்கு எழுதப்பட்ட தான பத்திரத்தை ரத்து செய்து சார்- ஆட்சியர் உத்தரவிட்டார்.
செஞ்சி அருகே சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன் (101). இவர் 19.2.2021-ல்திண்டிவனம் சார் - ஆட்சியர் அனுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், எனக்கு சொந்தமான, 2.25 ஏக்கர் நிலத்தை, 2008ம் ஆண்டு என் மகன் வழி பேரன் மாசிலாமணிக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்தேன். ஆனால், அவர் என்னை பராமரிக்கவில்லை.வயதான காலத்தில், தனியாககஷ்டப்பட்டு வருகிறேன். அதனால்,என் பேரனுக்கு நான் செய்து கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சார்- ஆட்சியர் நடத்திய விசாரணையில் சின்னப்பன் தனியாக தானே சமைத்து சாப்பிட்டு வருவதும், அவரை குடும்பத்தினர் யாரும் பராமரிக் கவில்லை என்பதும் தெரிந்தது.
இதையடுத்து தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007 பிரிவு 23-ன் படி, சின்னப்பன், மாசிலாமணிக்கு தானமாக எழுதி கொடுத்த பத்திரப்பதிவு எண் 761/2008-ஐ ரத்து செய்து அண்மையில் சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவு நகல், சத்தியமங்கலம் சார் - பதிவாளருக்கு அனுப்பப்பட்டது.
இதே போல திண்டிவனம் அருகே நடுவந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி வள்ளி, தன் மகன் பெரியசாமி தன்னை பராமரிக்கவில்லை என கோரிக்கை மனு அளித்திருந்தார். இம்மனு மீது விசாரணை மேற்கொண்ட சார்-ஆட்சியர், மண்ணம்பூண்டி கிராமத்தில் உள்ள பெரியசாமிக்கு எழுதப்பட்ட 1 ஏக்கர் 21 சென்ட் தான செட்டில்மென்ட் ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் தன் மகன் மணிவண்ணனுக்கு சின்ன நெற்குணம் கிராமத்தில் உள்ள நிலத்தை எழுதிவைத்தும், அவர் தன்னை பராமரிக்கவில்லை என கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவை விசாரணை மேற்கொண்ட சார்-ஆட்சியர் மணிவண்ணன் பெயரில் எழுதப்பட்ட தான செட்டில்மென்ட் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT