Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM
விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தில், குடும்ப அட்டைதாரர் களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2000-ஐ உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பயனா ளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:
அரசு அறிவித்த கரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அத்தியாவசியத் தேவையின்றி எவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். என்னதான் அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியம். இங்கு வந்தவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் தங்களுக்கு மூச்சுத் திணறல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக ஆக்சிஜன் அளவினை கண்டறியும் கருவி வாயிலாக பரிசோதனை மேற்கொண்டு ஆக்சிஜன் அளவு 90-க்கு குறைவாக இருந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் அல்லது மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் ஆக்ஸி மீட்டர் அளிக்கப்பட்டு அதன்மூலம் பொதுமக்களின் ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும். 3-வது அலை பரவாமல் தடுப்பது நம்மிடம் தான் உள்ளது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். நாளை (இன்று) ஆட்சியர் அலுவலகத்தில் நானும் இருப்பேன் அங்கு வந்தும் கரோனா நிவாரண நிதியை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து காணை முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை அமைச்சர் பொன்முடியிடம் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்கள், திமுகவினர் கரோனா நிவாரண நிதியாக ரூ.1,93,500-ஐ வழங்கினர். பின்னர் அமைச்சர் பொன்முடி கெடார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு இணைப் பதிவாளர் பிரபாகரன், விக்கிரவாண்டி எம் எல் ஏ புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் ஆக்ஸி மீட்டர் அளிக்கப்பட்டு அதன்மூலம் பொதுமக்களின் ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT